கவர்னர்-எதிர்கட்சிகளுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது.
- மருத்துவ கவுன்சில் கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்.
சென்னை:
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே புதிதாக மாநகராட்சி சார்பில் ரூபாய் 28 லட்சம் செலவில் அமைக்கப்படும் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளான ஸ்டான்லி, தர்மபுரி உள்பட மூன்று கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா, பயோ மெட்ரிக் வருகை பதிவேடு ஆகிய சிறு, சிறு குறைகளுக்காக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்பது போன்று தகவல் வெளியிடப்பட்டது.
தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, டெல்லியில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து தேசிய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் எக்காரணத்தைக் கொண்டும் ரத்தாகாது. ரத்தாகும் அளவிற்கு தமிழக அரசு விடாது. இன்று அல்லது நாளைக்குள் டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும். இந்த விவகாரத்தில் மருத்துவ கவுன்சில் கொஞ்சம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தாததால் சின்ன விஷயம் பெரிதாக்கப்பட்டு விட்டது.
இதுதொடர்பாக மத்திய சுகாதார மந்திரி உள்பட இரண்டு மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளோம். நேரம் கிடைத்ததும் நேரில் சென்று சந்தித்து பேசுவோம்.
தமிழக கவர்னர் சிதம்பரம் சிறுமிகள் விஷயத்தில் தவறாக பேசிவிட்டார்.
அதேபோல், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆனந்தும் தவறாக பேசினார். அதுபற்றிய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், சின்ன குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக இந்த பிரச்சினையை மேற்கொண்டு பேச விரும்பவில்லை.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களும், கவர்னரும் விமர்சித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீதும், நலனின் மீதும் அக்கறையில்லாதவர்கள் தான் இவ்வாறு விமர்சிப்பார்கள். இது எல்லோருக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.