தமிழ்நாடு

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.

அரசு பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி: ஆரஞ்சு மிட்டாய்-பொரி உருண்டை சாப்பிட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்

Published On 2023-10-30 09:51 GMT   |   Update On 2023-10-30 09:52 GMT
  • தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.
  • கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அருகே தென்பொன்முடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்வி முடித்து பட்ட படிப்புக்கு சென்று வருகின்றனர்.

கடந்த 2003-ம் ஆண்டு இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

இதில் இந்த பள்ளியில் 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நண்பர்கள் சந்தித்துக் கொண்டதால் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் அந்த காலகட்டத்தில் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர், ஆசிரியைகளையும் வரவழைத்து அவர்களையும் கவுரப்படுத்தி, அவர்களிடம் வாழ்த்தும் பெற்று கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் தங்கள் நண்பர்களிடம் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

அத்துடன் தங்கள் காலகட்டமான 90 காலகட்டத்தில் இருந்த அப்போதைய திண்பண்டங்களான ஆரஞ்சு மிட்டாய், பொரி உருண்டை, ஜவ்வு மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், புளி மிட்டாய் என பல்வேறு விதமான மிட்டாய்களை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்த மிட்டாய்களின் சிறப்பினையும், தாங்கள் படித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்தனர்.

இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.

அத்துடன் பள்ளி மைதானத்தை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்களும் வழங்கினர்.

கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது. 

Tags:    

Similar News