கன மழை எச்சரிக்கை: கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- ஏழு மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு.
- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த மழை நாளை காலை 8.30 மணி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இதனால் 250 பேர் கொண்ட 10 தேசிய மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.