பாஜகவின் வாக்கு வங்கி பற்றி பேச செல்வப்பெருந்தகைக்கு அருகதை இல்லை- எச்.ராஜா
- எச்.ராஜா காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
- எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் தான் தி.மு.க. வெற்றி பெற்றது.
காஞ்சிபுரம்:
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் இருவரும் 20 நிமிடங்கள் உரையாடினார்கள். பின்னர் எச்.ராஜா காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
அதன்பிறகு எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்துக்கு பொருளாதாரம் தான் தெரியாது என்றால் அவருக்கு கணக்கும் கூட தெரியவில்லை, பா.ஜ.க. ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி கொடுத்தது, அதில் 240 தொகுதி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ப.சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 தொகுதிகளுக்கும், 240 தொகுதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். இது அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் குற்றமா என கேள்வி கேட்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர் வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவேண்டும் எனவும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் எனவும் இஸ்ரேலில் உள்ள தனியார் அமைப்பு மூலம் வேலை செய்ததாக வெளியே தெரிய வந்துள்ளது. இது போன்று தேச துரோக வேலையில் ஈடுபட்டவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததால் தான் தி.மு.க. வெற்றி பெற்றது. கடந்த முறையை விட இந்த முறை தி.மு.க. வாக்கு வங்கி குறைந்து உள்ளது.
அனைத்து மதங்களையும் மேம்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி மதப் பிரிவினைவாதிகளை உண்டாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டு, பெரும்பான்மையானவர்களை புறக்கணித்தனர்.
பா.ஜ.க. வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறி வருவது தவறானது என்றும் பா.ம.க.வின் வாக்குகளே பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் உயர்வுக்கு காரணம் என்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் பயணித்து தற்போது காங்கிரசில் உள்ளார். பா.ஜ.க. பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை. மீறி பேசினால் அவருடைய பல்வேறு பின்புலங்களை ஆராய வேண்டியிருக்கும். ஆகவே அவர் வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.