அரசியலில் இருக்க வேண்டுமா என யோசித்தேன்- அண்ணாமலை
- கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது.
- எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
கோவை குஜராத் சமாஜத்தில் இன்று தன்னார்வலர்கள் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கு பணியாற்றியபோது பா.ஜ.க. களப்பணியாளர்கள் 28 நாட்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
மக்கள் அருகில் சென்று அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் பல சம்பவங்களை அனைவரும் சந்தித்தீர்கள். பலமுறை பலர் போலீஸ் நிலையங்களில் அமர வைக்கப்பட்டனர்.
அதுபோன்ற நேரங்களில் எல்லாம் எனக்கு தகவல்கள் பலரிடம் இருந்து கொந்தளிப்பாக வந்து கொண்டிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது.
நமது வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் கூற வேண்டும். கோவை தொகுதியில் 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். 100 பூத்களில் 1 அல்லது 2-ம் இடத்துக்கு வந்துள்ளோம்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 68 ஆயிரம் பூத்களில் 8 ஆயிரம் பூத்களில் முதலிடம் பெற்றுள்ளோம். எனவே பா.ஜ.க. வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சைனா வேம்பு என்ற மரம் உள்ளது. இதற்கு 90 நாட்கள் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். பல முறை தண்ணீர் ஊற்றினாலும் செடி வளருவது போல் இருக்காது. ஆனால் 90 நாட்கள் கடந்த பிறகு தான் அதன் வேர் நன்கு ஊன்றிருப்பதை காண முடியும். அதேபோல பா.ஜ.க. களப்பணியாளர்களின் செயல்பாடுகள் ஆழமாக வேரூன்ற தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
கோவை பாராளுமன்ற தேர்தல் நமக்கு ஒரு ஆன்மீக பயணம். கூட்டணி இல்லாமல், பணம் இல்லாமல் பலவகையான சவால்களை சந்தித்து இந்த நிலையை அடைந்துள்ளோம். இது நமக்கு தோல்வி அல்ல.
பா.ஜ.க.வினர் பிரதமர் மோடியை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு மூன்றாவது முறையாக அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.
பா.ஜ.க.வினர் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ எதையும் எதிர்நோக்குபவர்கள் அல்ல. நாட்டு முன்னேற்றத்தை மட்டுமே கொண்டு உழைப்பவர்கள். பா.ஜ.க. தலைவர்கள் பலர் சொத்துக்களை இழந்துள்ளனர்.
நாம் சில நேரம் கால்களை பின்னால் வைக்க நேரிடும். சில சமயம் காலை முன்னால் வைக்க வேண்டும். எப்போது முன்னால் வைக்க வேண்டும், எப்போது பின்னால் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும்.
அரசியலில் சகிப்பு தன்மை, பொறுமை, சமரசம் மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நமது கட்சியில் இருப்பவர்கள் கூட குறைகூறிக் கொண்டு தான் இருப்பார்கள்.
அனைத்தும் சகித்துக் கொள்ளும் தன்மை வேண்டும். எப்போதும் 5-வது கியரிலும் செல்லக்கூடாது. முதல் கியரிலேயே சென்று கொண்டும் இருக்கக் கூடாது.
அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது உண்டு.
எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேணடும் என்றால் கட்சியில் இணையாமல் செயல்பட வேண்டும்.
தனி மனிதனாக சமுதாயத்திற்கு வேலை செய்து கிடைக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடு ஆகாது.
என் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமான காலம். 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.