தமிழ்நாடு

'சூர்யவம்சம்' படத்தில் கலெக்டர் ஆக்கியதுபோல, ராதிகாவை எம்.பி ஆக்குவேன் - சரத்குமார்

Published On 2024-03-24 09:58 GMT   |   Update On 2024-03-24 12:18 GMT
  • விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்
  • மதுரையில் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான்

பாஜகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் சமகவை பாஜகவுடன் இணைப்பதாக சரத்குமார் அதிரடியாக அறிவித்தார். மூன்றாவது முறை மோடியை பிரதமராக்குவதே லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் களம் காண்கிறார்கள். இதனால் விருதுநகரில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

மதுரை அடுத்த திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வழிபாடு நடத்திய பிறகு ராதிகா சரத்குமார் தனது பரப்புரையைத் தொடங்கினார். அப்போது பேசிய ராதிகா, "வேலைவாய்ப்பு, இருப்பிடம் மற்றும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே நாங்கள் செயல்படுவோம். பிரதமர் மோடி நாட்டுக்கு எத்தனையோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவற்றில் பல விஷயங்கள் இன்னும் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை. ஆகவே, மோடியின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வர நாங்கள் பாடுபடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான், ராதிகா போட்டியிட்டாலும் ஒன்றுதான். சூரியவம்சம் படத்தில் கலெக்டர் ஆக்கியது போல எனது மனைவி ராதிகாவை எம்.பி ஆக்குவேன். காமராஜர் பிறந்த மண்ணில் என் மனைவி போட்டியிடுவது பெருமை, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Full View
Tags:    

Similar News