தமிழ்நாடு

ஈஷா சார்பில் 5,000 சிறை கைதிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு

Published On 2022-12-12 09:26 GMT   |   Update On 2022-12-12 09:26 GMT
  • சிறை கைதிகள் தினமும் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
  • சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது.

கோவை:

சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், கடலூர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மத்திய, மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் (Sub jails) இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.

சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று 'உயிர் நோக்கம்', 'சூரிய சக்தி', 'உப யோகா' ஆகிய யோக பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் பல சிறை கைதிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சிறைகளில் வகுப்பு எடுத்த ஈஷா யோகா ஆசிரியர்கள் கூறுகையில், கடலூர் சிறையில் யோகா வகுப்பு நடத்தும் போது 19, 20 வயது மிக்க இளைஞர்கள் சிலர் விருப்பமின்றி முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டதாகவும், ஆனால், 3-வது நாள் வகுப்பு முடித்த பிறகு அதற்கு முற்றிலும் நேர் எதிராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

'இது போன்ற யோகா வகுப்பில் முன்பே கலந்து கொண்டு இருந்தால் இப்படி சிறைக்கு வந்திருக்கமாட்டோம். பரவாயில்லை. இப்போதாவது இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் வெளியில் சென்ற பிறகு மீண்டும் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது இந்த வகுப்பு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்' என யோகா வகுப்பில் பங்கேற்ற கைதிகள் கூறியுள்ளனர்.

1992-ம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 40,000 சிறை கைதிகள் இவ்வகுப்புகளால் பயன்பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News