தமிழ்நாடு

சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என்.95 முக கவசங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கியது ஈஷா

Published On 2022-07-21 11:08 GMT   |   Update On 2022-07-21 11:08 GMT
  • முக கவசங்களை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் அமைச்சர் பிரித்து வழங்கினார்.
  • மருத்துவமனைகளுக்கு வருகை தருவோர் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் இன்று (ஜூலை 21) வழங்கப்பட்டது.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும் பிரித்து வழங்கினார்.



இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "4 லட்சம் கே.என். 95 முக கவசங்களை தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு ஈஷா அமைப்பினர் வழங்கி உள்ளார்கள். அந்த முக கவசங்கள் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட சுகாதார துறை இயக்குநர்களிடம் தலா 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஆயிரம் முக கவசங்கள் பொது சுகாதார துறைக்கு வழங்கப்பட உள்ளது. இவை வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதற்கு முன்பு, ஈஷா சார்பில் கொரோனா முதல் அலையின் போதும் இதேபோல் முக கவசங்களும், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News