அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு
- அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
கரூர்:
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, அந்த மெஸ்சுக்கு சீல் வைத்தனர்.
பின்னர் சமீபத்தில் அதிகாரிகள் ஒப்பதலுடன் சீல் அகற்றப்பட்டு மெஸ் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொங்கு மெஸ் நிர்வாகத்தினர் பழைய மெஸ் கட்டிடம் அருகாமையில் புதிதாக புதிதாக கட்டி வரும் 4 மாடி கட்டிடத்தை பொறியாளர்களை வைத்து அளந்தனர். மேலும் கட்டிட மதிப்பீட்டை பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இதில் 2 கார்களில் வந்த 9 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீட்டிலும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.
பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜியின் நண்பரின் ஓட்டல் கட்டிடத்தை தொடர்ந்து அவரது சகோதரர் கட்டும் புதிய வீட்டினை வருமானவரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பீடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.