மோசடி வழக்கில் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் சகோதரருக்கு திடீர் நெஞ்சுவலி
- கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர்.
- தனபாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது.
இதனை தடுக்க முற்பட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட கார் டிரைவர் கனகராஜ் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிர் இழந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கொடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியில் உள்ள வாசுதேவனுக்கு சொந்தமான இடத்தை ரூ. 5 கோடிக்கு துரையரசு என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலம் வாங்குவதில் இடைத்தரகராக தனபால் இருந்துள்ளார். பத்திரப்பதிவு முடிந்த நிலையில் குறிப்பிட்டப்படி துரையரசு வாசுதேவனுக்கு பணத்தை கொடுக்காமல் தலைமறை வாகியுள்ளார்.
இதனையடுத்து வாசுதேவன் கொடுத்த புகாரின் பேரில் இடைதரகராக செயல்பட்ட தனபாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மேச்சேரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்த தனபாலுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது . இதனால் அவர் கதறி துடித்தார். தகவல் அறிந்த சிறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவரை மீட்டு சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.