தமிழ்நாடு

கள்ளழகர் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாள்: கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பரவசம்

Published On 2023-12-23 10:28 GMT   |   Update On 2023-12-23 10:28 GMT
  • சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
  • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அலங்காநல்லூர்:

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் சிகர நிகழச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.10 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். 'முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தர ராஜபெருமாள் அருள்பாலித்தார். திருஅத்யயன உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளும் நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சுந்தரராஜ பெருமாளை வணங்கினர்.

இதைப்போலவே இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்தி ருந்தனர்.

மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் கூடலழகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

Similar News