தமிழ்நாடு

காஞ்சி பட்டு சேலைகளின் விலை அதிரடி உயர்வு

Published On 2024-04-25 06:26 GMT   |   Update On 2024-04-25 06:26 GMT
  • தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
  • ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம்:

கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் காஞ்சி பட்டு சேலைகள் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்றுள்ள காஞ்சி பட்டு சேலைகள் சிறப்பு அம்சங்களை கொண்டவையாக திகழ்கின்றன.

தங்கம், வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் 25 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சி பட்டு சேலைகள் தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் காஞ்சி பட்டு சேலைகளின் வியாபாரமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி அளவுக்கு பட்டு சேலைகள் விற்பனையாகின்றன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் ஏரிக்கரையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தியாகும் ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் காப்பர், 24 சதவீதம் பட்டு இழை ஆகியவை சேர்க்கப்படும்.

ஒரு பாக்கெட்டில் 242 கிராம் அளவுக்கு ஜரிகை இருக்கும். 5 கட்டைகளில் சுற்றப்பட்டுள்ள இந்த ஜரிகையை ஒரு மார்க் என்று அழைப்பார்கள். இந்த ஒரு மார்க் ஜரிகை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம்-1.210 கிராம், வெள்ளி-96.8 கிராம், காப்பர்-85.91 கிராம், சில்க்-58.08 கிராம் சேர்க்கப்பட்டிருக்கும்.

தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டு சேலைகள் விலையை 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தியாளர்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளனர். காஞ்சி பட்டு சேலைகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக ஜரிகை விலை உயர்ந்து பட்டு சேலைகளின் விலையும் அதிகரிப்பதால் விற்பனை பாதிக்கப்படும் என்று பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டு சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் நெசவாளர்களுக்கு எப்போதும் போல வேலையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக விலை உயர்ந்து உள்ளது. ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

தேர்தல் காரணமாக கடந்த 1½ மாதமாக பட்டு சேலைகள் வியாபாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம், வெள்ளி விலையேற்றமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த பட்டு சேலை ரூ.15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இப்படி அனைத்து ரக சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News