தமிழ்நாடு

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் அண்ணா நினைவிட நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளதை காணலாம்.

தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் செப்டம்பர் 17-ந்தேதி திறப்பா?

Published On 2023-08-04 03:28 GMT   |   Update On 2023-08-04 03:28 GMT
  • கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன.
  • தி.மு.க. உதயமான தினம் செப்டம்பர் 17-ந்தேதி வருகிறது.

சென்னை:

கருணாநிதி, தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சர் அரியணையை அலங்கரித்தவர். தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர். கலை, இலக்கியம், அரசியலில் கோலோச்சியவர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தனது 94-வது வயதில் மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல் அவரது ஆசைப்படியே சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் கருணாநிதியின் நினைவிடம் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசும்போது, 'கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும். கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் கட்டும் பொறுப்பு பொதுப்பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கடல்சார் ஒழுங்குமுறை ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற துறைகளின் உரிய அனுமதியோடு நினைவிட கட்டுமான பணி தொடங்கியது. கருணாநிதி கலை, இலக்கியம், அரசியல் ஆகிய 3 துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக 3 வளைவுகளில் பிரமாண்ட 'உதயசூரியன்' வடிவமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

திருவாரூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் கோட்டம் போன்று நினைவிட அருங்காட்சியகத்திலும் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள், அவரது பொன்மொழிகள் தொகுப்பு போன்ற தனித்தனி அரங்குகள் அமைய உள்ளன. அன்பு உடன்பிறப்பே! என்ற கருணாநிதியின் கர்ஜனை குரல் தொடர்ந்து ஒலிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளில் நவீன தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து லேசர் ஒளியில் சூரியன் உதிப்பது போன்ற தத்ரூப காட்சி அமைப்புகளும் இடம் பெறும் என்று தெரிகிறது.

மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டுமான பணிகளை திறம்பட மேற்கொண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மெச்சத் தகுந்த பாராட்டை பெற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதான் கருணாநிதி நினைவிட அருங்காட்சியக கட்டுமான பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

கருணாநிதி நினைவிட அருங்காட்சியக கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது என்று அவர் கூறி இருக்கிறார். எனவே கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் விரைவில் திறப்பு விழா காணும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பணிகளும் இரவு-பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தி.மு.க. உதயமான தினம் செப்டம்பர் 17-ந்தேதி வருகிறது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15-ந்தேதி), கருணாநிதி பிறந்தநாள் (ஜூன் 3) மற்றும் தி.மு.க. ஆண்டு விழா (செப்டம்பர் 17) ஆகிய 3 விழாக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ந்தேதி முப்பெரும் விழாவாக தி.மு.க. கொண்டாடி வருகிறது.

எனவே முப்பெரும் விழாவையொட்டி கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் செப்டம்பர் 17-ந்தேதி அன்று திறக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதால் பேரறிஞர் அண்ணா நினைவிடத்துக்கு பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே அத்துமீறி யாரும் உள்ளே நுழைந்துவிடாத வகையில் அண்ணா நினைவிட முகப்பு அடைக்கப்பட்டுள்ளது.

அங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கருணாநிதி நினைவிட அருங்காட்சியக பணிகளை படம் எடுப்பதற்கு பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அனுமதியும் மறுக்கப்படுகிறது.

முதலில் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தை திறந்து வைத்துவிட்டு அதன்பின்னர், அவரது நினைவிட பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து ரூ.81 கோடியில் 134 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News