புதிய விமான நிலையம் அமைய இருக்கும் பரந்தூரில் நிலம் மதிப்பு கடும் உயர்வு
- பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது.
- விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 115-வது நாளாக நீடித்து வருகிறது.
பொதுமக்களின் போராட்டம் நீடித்து வந்தாலும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் சேவையை பரந்தூர் வரை நீடிப்பது, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதிய விமான நிலையம் வருகை காரணமாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து உள்ளது.
விமான நிலையம் திறக்கப்படும்போது பரந்தூர் பகுதி அசுர வளர்ச்சியில் இருக்கும் என்பதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
இதனை கணக்கிட்டு இப்போதே ரியல் எஸ்டேட் அதிபர்கள், பெரும் முதலாளிகள் கிராம மக்களிடம் நிலத்தை மொத்தமாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2.40 லட்சமாக இருந்த 600 சதுர அடி நிலம் தற்போது ரூ.10 லட்சம் வரை விலை போகிறது. இந்த விலையை தாண்டியும் போகும் என்பதால் பலர் தங்களது நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலையம் வருகையால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் பல இடங்களில் இப்போதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் குடியிருப்பு பிளாட்டுகள் விற்பனை விளம்பரத்தை அதிகரித்து உள்ளனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள பகுதிகளை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை விற்பது தொடர்பாக பத்திரப்பதிவுத்துறைக்கு மாவட்ட கலெக்டர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தடையில்லா சான்றிதழ் பெறாமல் எந்த பத்திரப்பதிவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.