செங்கோட்டை அருகே பசுவை தாக்கிய சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை
- பசுவின் வாய் பகுதி முழுவதும் சிதைந்தது, கால்நடை மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
- சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தோட்டத்திற்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள கண்ணு புளி மெட்டு மோட்டை நரி பொத்தை பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அதில் அவர் தென்னை, மா போன்றவற்றை பயிர் செய்தும், மாடு வளர்த்து, பராமரித்தும் வருகிறார்.
இந்நிலையில் நேற்று ரமேசிடம் வேலை பார்க்கும் மாரியம்மாள் என்ற பெண் ரமேசுக்கு சொந்தமான கர்ப்பமான பசுவை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர் அதனை தோப்பிற்குள் விட்டுவிட்டு, தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது திடீரென பசு அதிக சத்தத்துடன் கத்தியுள்ளது. இதனால் மாரியம்மாள் கூச்சலிட்டவாறு அப்பகுதியை நோக்கி ஓடிச்சென்று பார்த்துள்ளார்.
அப்போது பசுவின் வாய் பகுதி முழுவதும் கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்தம் சொட்டியவாறு அந்த பசு நின்றுள்ளது. உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பசுவின் வாய் பகுதி முழுவதும் சிதைந்தது, கால்நடை மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினர் கூறுகையில், இந்த பகுதியில் ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. அதுதான் இந்த பசுவினை தாக்கி இருக்கும் என்றனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தோட்டத்திற்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் செங்கோட்டை வனத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு கேமரா அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தில் கூண்டு வைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.