தமிழ்நாடு

அமைச்சர் எவ வேலு

பரந்தூர் விமான நிலையத்துக்கு வீடு, நிலம் தரும் குடும்பத்தில் படித்தவருக்கு அரசு வேலை- அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

Published On 2022-08-27 03:05 GMT   |   Update On 2022-08-27 03:05 GMT
  • புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம்.
  • பரந்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேட்டால், நிலத்துக்கு பணம் கொடுப்பதால் நிலம் வாங்கிக்கொள்ளலாம்.

சென்னை:

சென்னை அருகே பரந்தூரில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையத்துக்கான நில எடுப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த திட்டத்துக்கு அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நில எடுப்பு பணியில் அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே நானும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அங்குள்ள 13 கிராமங்களின் விவசாயிகள், குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசினோம்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள், எடுக்கப்படும் நிலத்துக்கு அரசின் வழிகாட்டி மதிப்பைவிட அதிகமான தொகை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றனர். ஏகநாதபுரம், பரந்தூரில் வசிப்பவர்கள், விமான ஓடுபாதையை மாற்றி அமைத்தால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதை தவிர்க்கலாம் என்றனர். எனவே அதுபற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவர்களிடம் தெரிவித்து, அது முறையாக இருக்கும் என்றால் அதன்படி மாற்றலாம் என்று கூறினோம்.

மேலும் பெரும்பான்மை மக்கள், நிலத்தின் விலையை அதிகமாக தரவேண்டும், மாற்று வீடுகள் தரவேண்டும் என்றனர். அரசுத் திட்டங்களை கொண்டுவரும்போது எந்த இடமானாலும் விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற 2029-ம் ஆண்டுடன் அதன் முழு கட்டுப்பாடும் முடிந்து விடுகிறது. சரக்கு கையாளுதல், தற்போதுள்ள ஓடுதளத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை அதற்கு மேல் செயல்படுத்த முடியாது. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தின் வளர்ச்சி, மும்பையில் 2 விமான நிலையங்கள் உருவாக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் தேவைப்படுகிறது.

அதற்காக முதலில் 11 இடங்களை ஆய்வு செய்தோம். அதில் படாளம், திருப்போரூர், பரந்தூர், பன்னூர் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்தோம். திருப்போரூர், படாளம் அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காது. பரந்தூரைவிட பன்னூரில் அதிகமான குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்பதால் இறுதியில் பரந்தூர் முடிவு செய்யப்பட்டது.

அங்கு நிலத்துக்கு அதிக தொகை தரவேண்டும் என்று கேட்டுள்ளதால், தற்போதுள்ள நில மதிப்பீட்டில் மூன்றரை மடங்கு அதிக தொகை கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. விமான நிலையம் அமையும் பகுதியின் சுற்றுவட்டாரத்திலேயே அரசு அடையாளம் கண்டுள்ள இடங்களில் அவர்களுக்கு நிலமும், அதில் வீடு கட்ட பணமும் தரப்போகிறோம். அதாவது, எடுக்கும் நிலத்துக்கான தொகை, புதிய இடத்தில் நிலம் மற்றும் அங்கு வீடுகட்ட பணம் ஆகியவை தரப்படவுள்ளன. குறிப்பாக, மாடப்புறம் பகுதி மக்கள் அனைவருக்கும் ஒரே பகுதியில் இடம் தரப்போகிறோம்.

புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம். வாகனங்கள் அதிகளவில் வந்து செல்ல முடியும். சென்னைக்குள் வரும் நெரிசலைக் குறைக்க முடியும். இதன் மூலம் அன்னியச் செலாவணி, பொருளாதார உயர்வு போன்றவை தமிழகத்துக்கு வரும்.

கடந்த ஆட்சியில் சேலம் 8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கையகப்படுத்த அரசு தீவிரம் காட்டுவது ஏன் என்று கேட்டால், அது தவறு. சாலை போடுவதை தி.மு.க. எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள். இல்லையேல் மாற்றுவழியைக் காணுங்கள் என்றுதான் தி.மு.க. சார்பில் சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பரந்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேட்டால், நிலத்துக்கு பணம் கொடுப்பதால் நிலம் வாங்கிக்கொள்ளலாம். வீடு கட்டவும் பணம் முழுமையாக கொடுக்கிறோம். இடத்தையும் இலவசமாக கொடுக்கிறோம். 13 கிராமத்தில் தகுதி அடிப்படையில் வீட்டில் படித்தவர்களுக்கு அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்கப்படும். நில எடுப்புக்காக மொத்தம் 13 கிராமங்களில் 1,005 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு நில எடுப்பு சட்டப்படி நிலங்களை எடுக்கிறோம்.

இழப்பீட்டை கணக்கிடுவதில் 2 வகைகள் உள்ளன. அரசின் வழிகாட்டி மதிப்பீட்டை (வேறுபடக்கூடியது) வைத்து செட்டில் செய்வது ஒரு வகை. சந்தை மதிப்பை வைத்து செட்டில் செய்வது மற்றொரு வகை. நேரடியாக பேசும்போது அதை முடிவு செய்வோம்.

வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் அரசு பணம் கொடுத்துவிடும் என்று சிலர் பயந்தனர். ஆனால், நிலத்தின் சந்தை மதிப்பை கணக்கிட்டு பணம் தருவோம் என்று கூறியிருக்கிறோம். நீர்நிலைகள் அதிகமாக இருப்பதால் அதுபற்றி சென்னை ஐ.ஐ.டி.யுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இந்த திட்டத்தால் காவேரிப்பாக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் வரை வரும் ஓடைக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விமான நிலையத்துக்கான பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 8 ஆண்டுகளாகும். பரந்தூர் விவகாரத்தில் மற்ற கட்சியி னரால் மக்கள் தூண்டப்படுவதாக அரசு நினைக்கவில்லை.

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Tags:    

Similar News