தமிழ்நாடு

தி.மு.க. இளைஞரணி மாநாடு சுடர் தொடர் ஓட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2024-01-18 03:35 GMT   |   Update On 2024-01-18 05:44 GMT
  • 2 முறை தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 17-ந் தேதி நடக்க வேண்டிய மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.
  • நீங்கள் அத்தனை பேரும் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்துகொண்டு மாநாட்டுக்கு பெருமை தேடி தர வேண்டும்.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகளை பங்கேற்க செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் மாநாடு என்பதால், இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மலர் தூவி வணங்கிவிட்டு சிம்சன் சந்திப்பு பெரியார் சிலைக்கு வந்து வணங்கினார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்டச் செயலாளர் சிற்றரசு, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் உள் ளிட்ட அனைத்து துணைச் செயலாளர்களும் நிர்வாகிகளும் உடன் வந்தனர்.

பெரியார் சிலையில் பிரகாசமாக தீப சுடர் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அந்த தீப சுடரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்து கூடியிருந்த நிர்வாகிகள் மத்தியில் காண்பித்தபடியே துணைச் செயலாளர் ஜோயலிடம் வழங்கினார்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் சிலைகளுக்கு நம்முடைய வீர வணக்கத்தை செலுத்தி இந்த சுடர் ஓட்டத்தை இங்கிருந்து துவங்கி வைத்துள்ளோம். இன்று தொடங்கி அடுத்த 2 நாட்களுக்கு கிட்டத்தட்ட 310 கி.மீ.அளவுக்கு சேலத்திற்கு சுடரை கொண்டு செல்கின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று உள்ள மாவட்டக் கழக செயலாளர்கள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிற்றரசு, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் அத்தனை பேருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் இளைஞரணியினர் அத்தனை பேருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2 முறை தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 17-ந் தேதி நடக்க வேண்டிய மாநாடு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்கள் தான் உள்ளது. இது மிகப்பெரிய முக்கியமான மாநாடு.

இளைஞரணிக்கு தலைவர் கொடுத்திருக்க கூடிய மிகப்பெரிய ஒரு சவால். இந்த சவாலை நாம் நிறைவேற்றி காட்ட வேண்டும். எந்த ஒரு இயக்கமும் தேர்தல் வருவதற்கு முன்பு மாநாடு நடத்துவார்கள். அதை தாய் கழகம்தான் நடத்தும். இந்த முறை ஒரு அணிக்கு, அதுவும் குறிப்பிட்டு சொல்கிறேன்.

இளைஞர் அணிக்கு அந்த வாய்ப்பை தலைவர் தந்துள்ளார். அந்தளவுக்கு நம்முடைய அணியின் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை எனக்கு உங்கள் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை.

நான் இளைஞரணி செயலாளராக 2019-ம் ஆண்டு பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரம் பேரை இளைஞரணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று தலைவர் உத்தரவிட்டார். அதை செய்து முடித்தோம்.

அதே போல் ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் வீதம் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம். அதன் பிறகு 4 லட்சம பேர்களுக்கு நிர்வாகிகள் பணிகளை கொடுத்தோம். பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நேர்காணல் செய்து நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தோம்.

மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகிய நீங்கள் செய்துள்ள பணிகளை வைத்து அந்த வேலையையும் செய்து முடித்தோம். அதே போல் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தி முடித்தோம்.

இப்போது இல்லம் தோறும் இளைஞரணி நிகழ்ச்சி நடத்தி வீடு வீடாக சென்று இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தோம். எல்லாவற்றையும் விட மிக முக்கிய பணியாக 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. தலைவர் இந்த பொறுப்பை நம்மிடம் கொடுத்துள்ளார். இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

இந்த மாநாட்டுக்கு பெயரே, மாநில உரிமைகள் மீட்பு மாநாடு கடந்த 9 வருடமாக நம்முடைய மாநில உரிமைகள் அத்தனையும் இழந்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளோம்.

கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை அனைத்தையும் இழந்து உள்ளோம். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிற ஒரு மிகப்பெரிய வெற்றி மாநாடாக நம்முடைய சேலம் மாநாடு அமைய போகிறது.

நம்முடைய சேலம் மாநாட்டை இதுவரை இந்திய வரலாற்றில் இப்படி ஒரு சிறப்பான எழுச்சியான மாநாடு நடந்ததில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தி காட்டுவோம்.

நீங்கள் அத்தனை பேரும் மாநாட்டில் குடும்பத்தோடு கலந்துகொண்டு மாநாட்டுக்கு பெருமை தேடி தர வேண்டும். இந்த சுடரை அடுத்த 2 நாட்களுக்குள் இளைஞர் அணி தோழர்கள் சேலத்திற்கு எடுத்து வர உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் பாதுகாப்பாக வர வேண்டும். 21-ந் தேதி சேலத்தில் சந்திப்போம். 20-ந் தேதியே பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. 20-ந் தேதி மாலை முதல்-அமைச்சர் நமது மாநாட்டு திடலுக்கு வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் இளைஞரணி மாநாட்டை விளக்கி சொல்வதற்காக 500 மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. அவர்கள் அத்தனை பேரையும் முதல்-அமைச்சர் சந்திக்க உள்ளார்.

20-ந் தேதி மாலை ஆரம்பிக்கின்ற மாநாடு 21-ந் தேதி காலை 8.30 மணியளவில் மாநாடு துவங்க உள்ளது. கழக துணைப் பொதுச் செயலாளர் அத்தை கனிமொழி எம்.பி. தான் மாநாட்டு பந்தலில் முகப்பில் கறுப்பு-சிவப்பு கொடியை ஏற்ற இருக்கிறார். அதன் பிறகு மாநாடு துவங்குகிறது.

அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. கழக பேச்சாளர்கள் 21 பேர் பேச உள்ளனர். இளைஞரணி புகைப்பட கண்காட்சி துவங்கப்பட உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். 2024 தேர்தலில் எப்படி இளைஞரணி மிக மிக முக்கியமாக இருந்ததோ அதே போல் இப்போதும் இருக்கும் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கும் இளைஞரணி தான் முன்களத்தில் நின்று பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News