எவ்ளோ பெரியார் வந்தாலும்.. மகாவிஷ்ணு குறித்து காட்டமாக பேசிய எம்.பி. தயாநிதிமாறன்
- எவ்ளோ பெரியார் வந்தாலும்.. இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க.
- நாம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் மூட நம்பிக்கையால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய மகாவிஷ்ணு குறித்து எம்.பி. தயாநிதிமாறன் பேசியுள்ளார்
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பேசிய எம்.பி. தயாநிதிமாறன், "இப்போது கஷ்டப்படுவதற்குப் போன ஜென்மத்தில் செய்த நீ பாவம் என்று பள்ளிக்கூடத்தில் ஒருவர் பேசுகிறார். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
நம் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் நாம் படிக்க வைப்பதே அவர்கள் படித்து முன்னேறி அறிவியல் பூர்வமாக சிந்தித்து அடுத்த தலைமுறையை முன்னேற்றுவார்கள் என்பதற்கு தான்.
எவ்ளோ பெரியார் வந்தாலும்.. இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க.
நாம் தமிழ்நாட்டை கஷ்டப்பட்டு முன்னேற்றினாலும் மூட நம்பிக்கையால் நம்மை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.
கர்நாடகாவில் படிக்காத சாமியார்கள் பிறந்த பெண் குழந்தைகளை நரபலி கொடுத்தார்கள். மூத்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தார்கள். அதனால் அம்மாநிலத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது" என்று தெரிவித்தார்.