தமிழ்நாடு (Tamil Nadu)

முல்லை பெரியாறு அணையிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

Published On 2024-06-01 04:20 GMT   |   Update On 2024-06-01 04:20 GMT
  • கடந்த ஆண்டு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது.
  • இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக உள்ளது.

கூடலூர்:

முல்லை பெரியாறு அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை கம்பம் பள்ளத்தாக்கு பகுதியாக உத்தமபாளையம் வட்டத்தில் 1807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2412 ஏக்கர் என மொத்தம் மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியாறு அணையின் பாசனத்தின் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் முதல் போகத்திற்கு ஜூன் மாதம் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்போக விவசாயத்திற்கு ஜூன் மாதம் முதல்நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 119 அடியை கடந்தது.

இந்நிலையில் தேனி மாவட்ட முதல்போக பாசனத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை அணையிலிருந்து பாசனத்திற்கு 200 கனஅடி, தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கனஅடி என 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது. தேக்கடியில் தமிழக பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் என யாரும் வரவில்லை. பொறியாளர் அன்புச்செல்வன் தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மயில்வாகணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக உள்ளது. வரத்து 204 கன அடி. இருப்பு 2475 மி.கன அடி.

ஒவ்வொரு ஆண்டும் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்போது விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு இங்குள்ள துர்க்கையம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி தண்ணீர் திறக்கப்பட்டதும் மலர்தூவி நன்றி தெரிவிப்பது வழக்கம். மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படி மும்மத வழிபாடும் நடைபெறும். இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்தும் மும்மதத்தினரும் தயார் நிலையில் இருந்த நிலையில் அதிகாரிகள் அதற்கு தடைவிதித்தனர். மேலும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளையும் அழைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வைகை அணையின் நீர்மட்டம் 47.54 அடியாக உள்ளது. வரத்து 14 கன அடி, திறப்பு 69 கனஅடி. இருப்பு 1686 மி.கன அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.15 அடி. வரத்து 22 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

Tags:    

Similar News