கோவிலின் கதவை உடைத்து 5 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம ஆசாமிகள்
- கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் உண்டியல் தப்பியது.
- கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது.
நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளிப்பக்க பூட்டுகள் உடைத்து கதவுகள் திறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள ஒன்றரை அடி உயரம் கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.
இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கோவிலை பார்வையிட்டனர்.
கோவிலில் முன்பக்கம் இரும்பு கிரில், மூலஸ்தானத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.
அதேபோல மூலஸ்தானத்திலும் இரும்பு கதவு, மரக்கதவு உடைக்கப்பட்டு உற்சவமூர்த்திகள் ஆன வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சிலைகள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.
உடைக்கப்பட்ட பூட்டுகள் அனைத்தையும் கோவிலின் அருகே வீசி உள்ளனர். கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் கோவில் உண்டியல் பணம் தப்பியது.
மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.