தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை: முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

Published On 2024-02-02 06:24 GMT   |   Update On 2024-02-02 06:24 GMT
  • சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
  • இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

நாகர்கோவில்:

திங்கள் சந்தை அருகே மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் குமார் (வயது 42). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்தார். சேவியர் குமாருக்கும், மைலோடு ஆலய பங்குபேரவை தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 20-ந்தேதி ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக இரணியல் போலீசார் பாதிரியார் ராபின்சன் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் கோர்ட்டிலும், ரமேஷ்பாபு நாகப்பட்டினம் கோர்ட்டி லும் சரணடைந்தனர்.

சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீசார் காவல் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரமேஷ்பாபுவை காவல் எடுத்து விசாரிக்க இரணியல் போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து ரமேஷ் பாபு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இரணியல் போலீசார் ரமேஷ்பாபுவை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ரமேஷ் பாபுவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு மீண்டும் ரமேஷ் பாபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை திருவனந்தபுரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News