நீலகிரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் திடீர் மரணம்
- கோபாலகிருஷ்ணன் ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
- அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
குன்னூர்:
நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பியாக இருந்தவர் அ.தி.மு.க.வை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 63). இவர் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தபோது, முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார்.
அவர் இறந்த தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டில் குவிந்தனர். அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இன்று மாலை வெலிங்டன் பகுதியில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.
உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 2014-ம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசாவை தோற்கடித்து எம்.பி.யானார்.
இவர் அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 2014-க்கு முன்பு வரை குன்னூர் நகராட்சி தலைவராக பதவி வகித்த அவர், அப்போது நடந்த எம்.பி. தேர்தலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போட்டியிட்டார் குறிப்பிடத்தக்கது.
இறந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு சுசிலா என்ற மனைவியும், அப்சரா என்ற மகளும் உள்ளனர்.