தமிழ்நாடு

இந்து அல்லாதவர் நுழைய தடை.. பழனி முருகன் கோவிலில் அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Published On 2023-07-31 12:59 GMT   |   Update On 2023-07-31 12:59 GMT
  • இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
  • கோவிலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் 'இந்துக்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்' என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது அகற்றப்பட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செந்தில் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பு பலகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்து சமய அறநிலையத் துறையின் ஆலய நுழைவு விதி சட்டம், இந்து அல்லாத எந்த சமயத்தினரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக் கூடாது என சட்டத்தில் உள்ளது என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், மாற்று மதத்தை நம்புகிறவர்களும் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அந்த சட்டம் சொல்வதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினார். இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News