மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு: லாரி டிரைவர்-வாலிபர் கைது
- கைகலப்பில் சங்கர் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் உதட்டில் கிழித்தது.
- காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பார்த்திபன்(வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடங்குளம் அருகே உள்ள சண்முகபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மினி லாரியில் மணல் கடத்தி கொண்டு செல்லப்பட்டு பழவூரில் இறக்கி விட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீஸ்காரர்கள் கார்த்தீசன், சுயம்புலிங்கம், கிருஷ்ணராஜ் ஆகியோர் சண்முகபுரத்திற்கு சென்றனர். அங்கு மணலை இறக்கிவிட்டு மினி லாரியில் இருந்து அதன் டிரைவர் மணிகண்டன் இறங்கினார்.
அவரை தடுத்து நிறுத்தி அனுமதி சீட்டை சரிபார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், வீட்டுக்குள் இருந்த சங்கரை அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், அரிவாளை எடுத்து வந்து போலீசாரை வெட்ட முயன்றார்.
உடனே போலீசார் சுதாரித்துக் கொண்டு சங்கரை தடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சங்கர் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் உதட்டில் கிழித்தது. மேலும் தடுக்க வந்த போலீஸ்காரர் கார்த்தீசனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே சங்கரையும் , லாரி டிரைவரான மணிகண்டனையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
இதற்கிடையே காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சங்கர், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கூடங்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து மணல் ஏற்றி வந்த மினிலாரி மற்றும் அரிவாளை கைப்பற்றினர்.
கைதான 2 பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். சங்கர் மீது ஏற்கனவே பழவூர், பணகுடி போலீஸ் நிலையங்களில் மணல் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.