தமிழ்நாடு

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

Published On 2023-09-13 10:12 GMT   |   Update On 2023-09-13 10:12 GMT
  • சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து நீர்நிலையில் கரைக்க வேண்டும் என்று விநாயகர் கூறவில்லை.
  • தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 13 இடங்கள் மற்றும் கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் போலீஸ் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செயப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் "தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதித்துள்ளது. அந்தந்த பகுதிகளில் சட்டம்- ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்குகின்றனர்.

இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும். ஈரோடு மாவட்டம் அன்னூரில் இருக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கேட்கிறார்"என்று வாதாடப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில்," தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படாது. சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து நீர்நிலையில் கரைக்க வேண்டும் என்று விநாயகர் கூறவில்லை.

அப்படி இருக்கும்போது, இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தனது சொந்த கருத்து மட்டுமே" என்று கூறி வழக்குகளை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News