தமிழ்நாடு (Tamil Nadu)

நெல்லையில் ரோடு ஷோ-பொதுக்கூட்டம்: ராகுல்காந்தி பிரசாரத்திற்காக குவிந்த தொண்டர்கள்

Published On 2024-04-12 10:15 GMT   |   Update On 2024-04-12 10:15 GMT
  • ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
  • ராகுல் காந்தி வருகையின் காரணமாக இன்று போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

நெல்லை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இன்று தமிழகம் வருகிறார்.

நெல்லையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். அப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.

இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 4 மணிக்கு பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார்.

பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெறும் பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே அமைந்து உள்ள பெல் பள்ளி மைதானத்திற்கு செல்கிறார். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடைக்கு சென்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறார்.

முன்னதாக அவர் ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் பொதுக்கூட்ட மேடை வரையிலும் ரோடு-ஷோ செல்கிறார்.

இதையொட்டி சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலை ஓரம் இருபுறங்களிலும் கம்புகள் கட்டப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன்கள், கார்களில் இன்று காலை முதலே நெல்லையில் குவியத் தொடங்கினர். இதனால் நெல்லை மாநகரம் போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. பாளை -திருச்செந்தூர் சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

ராகுல் காந்தி வருகையின் காரணமாக இன்று போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் டவுன் வழியாக வரும் வாகனங்கள் பாளை மார்க்கெட் வழியாக சீவலப்பேரி சாலையில் வந்து திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் குமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் சாந்திநகர், ரகுமத் நகர் சாலையில் வந்து திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் தாழையூத்து, சங்கர்நகர் வழியாக வரும் வாகனங்கள் மாவட்ட நீதிமன்றம்- சாந்திநகர் வழியாக திம்மராஜபுரம் கோவில் மைதானத்திற்கும் வந்து நிறுத்தப்பட்டிருந்தது.

ராகுல் வருகையையொட்டி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பு முன்எச்சரிக்கை காரணங்களுக்காக பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திலும், திருச்செந்தூர் சாலையின் இருபுறத்திலும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறந்தன.

மேடை அமைந்திருந்த பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் முழு உருவ பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News