தமிழ்நாடு (Tamil Nadu)

ரெயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு 'ரெயில் மதாத்' செயலி மூலம் 37 நிமிடத்தில் தீர்வு

Published On 2023-02-14 03:08 GMT   |   Update On 2023-02-14 06:39 GMT
  • 2019-20-ம் நிதி ஆண்டில் இருந்து 100 சதவீதம் பயணிகள் குறைகளை விரைவாக குறித்த நேரத்தில் களைவதில் முன்னணியில் இருக்கிறது.
  • கடந்த ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 2021-22-ம் நிதியாண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று தீர்வு பெற்றுள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய ரெயில்வே சமூக பொறுப்பு, பயணிகளுக்கு தடையற்ற சேவை அளிப்பதை குறிக்கோளாகக் கொண்டு பயணிகள் குறைகளை தீர்ப்பதை தலையாய கடமையாக செய்து வருகிறது. பயணிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு கண்டிட 2019-ம் ஆண்டு முதல் ரெயில் மதாத் என்ற செயலியை அறிமுகப்படுத்தி குறைகளை குறித்த காலத்தில் தீர்த்து வருகிறது. இந்த செயலி மூலம் குறுஞ்செய்தி, தொலைபேசி, சமூக ஊடகம், போன்றவற்றிலிருந்து பெறப்படும் பயணிகள் குறைகளை ஒருமுகப்படுத்தி கால நிர்ணயத்தோடு குறைகள் களையப்படுகின்றன.

தெற்கு ரெயில்வேயில் தொலைபேசி உதவி எண் 139 மூலம் 61 சதவீதமும், ரெயில் மதாத் இணைய தளம் (railmadad.gov.in மற்றும் railmadad.in) மூலம் 21 சதவீதமும், சமூக ஊடகம் மூலம் 10 சதவீதமும், ரெயில் மதாத் செல்போன் செயலி மூலம் 5 சதவீதமும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆகியவை மூலம் 3 சதவீத பயணிகளின் குறைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகின்றன. 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தெற்கு ரெயில்வே 'ரெயில் மதாத்' மூலம் பயணிகள் குறைகளுக்கு 37 நிமிடத்தில் தீர்வு கண்டு வருகிறது.

2019-20-ம் நிதி ஆண்டில் இருந்து 100 சதவீதம் பயணிகள் குறைகளையும் விரைவாக குறித்த நேரத்தில் களைவதில் முன்னணியில் இருக்கிறது. மேலும் குறைகள் பதிந்த முதல் கவனிப்பு நேரமான 8 நிமிடத்தில் பயணிகளை தொடர்பு கொண்டு குறைகளை களையத் தொடங்கி விடுகிறது. இந்த முதல் கவனிப்பு நேரம் மருத்துவ மற்றும் பாதுகாப்பு உதவிகளுக்கு பேருதவியாக உள்ளது.

இதனிடையே 2022-23-ம் நிதி ஆண்டில் ஜனவரி மாதம் வரை 75,613 பயணிகள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 2021-22-ம் நிதியாண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று தீர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News