மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: பாலருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு
- நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
- பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை அருகே உள்ள ஆரியங்காவு பாலருவியில் சில நாட்களாக தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். தண்ணீர் வரத்து சீரான பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பாலருவிக்கு குளிக்க சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் மீண்டும் குற்றாலத்திற்கு புறப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அருவியில் நீர்வரத்து குறையாததையடுத்து 3-வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதையடுத்து பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா வந்த பயணிகள் தடை விதிக்கப்பட்டு பார்ப்பதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை குளிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.