தமிழ்நாடு (Tamil Nadu)

ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

Published On 2024-07-06 04:33 GMT   |   Update On 2024-07-06 05:44 GMT
  • ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
  • போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட வெளியே செல்ல முயன்ற ஆதரவாளர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News