அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த சொல்வதா? உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஆர்எஸ்எஸ்
- நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
- மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மனு
சென்னை:
தமிழகத்தில் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்திருந்தார். உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் உள்ளரங்கில் அணிவகுப்பை நடத்திக்கொள்ளலாம் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார். மேலும் பல நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இவ்வாறு நிபந்தனைகள் விதித்ததால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை 44 இடங்களில உள்ளரங்க நிகழ்வாக நடத்தலாம் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஊர்வலத்திற்கு அனுமதி கோரியும் ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் அணிவகுப்பை உள்ளரங்க நிகழ்வாக நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார், என ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.