குலசையில் இருந்து ஏவப்பட்டது ரோகிணி ராக்கெட்
- குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
- வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ராக்கெட் இன்று குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்வி. மார்க்-3 ஆகிய முக்கியமான ராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது 'ஆர்.எச்.200' என்று அழைக்கப்படும் 'சவுண்டிங்' ராக்கெட்டாகும்.
இந்த வகை ராக்கெட்டை பயன்படுத்தி காற்றின் திசை வேகம், ஒலியெழுப்பும் ராக்கெட்டுகளின் வளர்ச்சி, ராக்கெட்டுகளில் உயிர்வாழ்வு உள்ளிட்ட பல முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.
குலசேகரன்பட்டினம் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கிறது? என்பது குறித்த தரவுகளை அறிந்து கொள்வதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இதன் மூலம் பெறப்படும் தரவுகள் கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டு, வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகளின் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்.