ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பறிமுதல்- ஐஜி ஆசையம்மாள் தகவல்
- முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு இயக்குனர் ராஜசேகர், அவரது மனைவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. இதேபோல் மேலும் சில நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக சென்னையில் இன்று பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
நிறுவனங்கள், இயக்குனர்கள் முக்கிய ஏஜெண்டுகளின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர்கள், முக்கிய ஏஜெண்டுகளின் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் அலெக்சாண்டர் மீது ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சொந்தமான 48 இடங்களில் சோதனை மேற்கொண்டு ரூ.3.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 448 கிராம் தங்க நகைகள், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு சொந்தமான 162 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.14.47 கோடி முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.