தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்

Published On 2024-02-02 03:01 GMT   |   Update On 2024-02-02 03:01 GMT
  • கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை.
  • புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

மடகாஸ்கர் உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கமிஷனர்கள், அதிகாரிகள், இந்தியாவுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்துள்ளோம். பாராளுமன்ற தேர்தலைப் பற்றி ஏற்கனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை காணொலி வாயிலாக வழங்கியுள்ளது.

அதைத்தொடர்ந்து, தற்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 250 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது. அதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவினருக்கு வரும் 5 முதல் 9-ந் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியை பெற்ற அலுவலர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்டங்களில் பயிற்சி அளிப்பார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் தேர்தல் கமிஷன் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்ற தமிழகத்தின் சார்பில் நானும், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கியத்துவம் பெற்ற மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் ஐ.ஜி அல்லது போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. நிலையிலான ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் முதல் கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். தேர்தல் பணிகளுக்கு கூடுதல் அதிகாரிகள் தேவைப்படுவது குறித்து தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பிக்கும்.

கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி அ.தி.மு.க. சார்பில் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின்படி புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவில் பதிவு தபாலில் அனுப்பப்படும்.

புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்புமனு தாக்கலுக்கான இறுதி தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News