தமிழ்நாடு

திமுகவுடன் ரகசிய உறவா?- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டிற்கு தமிழிசை விளக்கம்

Published On 2024-08-19 03:03 GMT   |   Update On 2024-08-19 03:03 GMT
  • திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
  • இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது.

சென்னை:

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு பங்கேற்றதன் மூலம் திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்... தமிழ்... என்று பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார்.

ஆனால் திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களோடு அந்த விருந்தில் பங்கேற்று உள்ளார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன் பின்னர்தான் முதலமைச்சர் அந்த விருந்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் இருந்து திமுகவும், பாஜக-வும் ரகசிய உறவு வைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது.

பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நாணயத்தை அதிமுகவே வெளியிட்டது. நாங்கள் பாஜக-வை அழைக்கவில்லை. ஆனால் திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு, விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காமல், பாஜக-வை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறது. இதில் இருந்தே அவர்களின் ரகசிய உறவு வெட்டவெளிச்சமாகி இருக்கிறது என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

திமுக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிக்கிறது.

இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News