தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை

Published On 2022-10-15 06:35 GMT   |   Update On 2022-10-15 06:35 GMT
  • ஒரு கிலோ சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு விவசாயிகளுக்கு ரூ.20 வரை செலவு ஆகி வருகிறது.
  • சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

போரூர்:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு கோவை, திருச்சி, பெரம்ப லூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரத்து அதிகம் காரணமாக சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் படிப்படியாக விலை அதிகரித்து வந்த சின்ன வெங்காயம் இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90-க்கும், சில்லரை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-ஐ கடந்தும் விற்கப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு விவசாயிகளுக்கு ரூ.20 வரை செலவு ஆகி வருகிறது.

இந்த நிலையில் போதிய விலை கிடைக்காததால் மன வேதனை அடைந்த விவசாயிகள் பலர் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்வதையே நிறுத்தி விட்டனர். இதன் காரணமாகவே தற்போது சின்ன வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாம்பார் உள்ளிட்ட சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி 7 முதல் 9 லாரிகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு குவிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அதன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

இன்று ஒரு லாரி சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News