நெஞ்சுவலியால் துடித்த போதும் உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வேன் டிரைவர்
- நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
- மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி.நகரைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று மலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார். இதனால் வேனில் இருந்த குழந்தைகள் பத்திரமாக இருந்தனர்.
இறந்து போன மலையப்பனுக்கு மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையப்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.