கடந்த 2 நாட்களில் 3 பேர் உயிரிழப்பு- வெள்ளியங்கிரி மலையேறுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறை
- பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வடவள்ளி:
கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த மாதம் 12-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பா ராவ்(வயது57). டாக்டரான இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார்.
பின்னர் வெள்ளிங்கிரி மலையடிவாரத்திற்கு வந்து மலையேற தொடங்கினார். 4-வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, சுப்பாராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(35). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரும் தனது நண்பர்கள் 12 பேருடன் வெள்ளிங்கிரி மலையேறினார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மலை இறங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேனியை சேர்ந்த பாண்டியன் (40) 2வது மலை அருகே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.