வனத்துறை அனுமதி பெறாததால் பழவேற்காடு முகத்துவார பணி நிறுத்தம்- 69 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு
- பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று மீனவ கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியை சுற்றி உள்ள 69 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், கடலும் இணையும் முகத்துவாரம் உள்ளது. இந்த முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம், இறால் உள்ளிட்டவை கிடைக்காமல் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.அவ்வப்போது அடைபடும் முகத்துவாரத்தை சொந்த செலவில் தற்காலிகமாக மீன்வர்களே தூர்வாரி வந்தனர். எனவே பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கிய நிலையில் கடந்த வாரம் பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க லைட் ஹவுஸ் பகுதியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்தப் பணிகளை 3மாதங்களில் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வனத்துறையினரில் உரிய அனுமதிபெறாமல் பழவேற்காடு முகத்துவார பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் முகத்துவார பணிகளை தடுத்து நிறுத்தினார். அப்போது அதிகாரிகள் கூறும்போது, வனத்துறையில் முறையாக அனுமதி பெறாமல் பணி நடைபெறுகிறது. மீறி பணிகள் நடைபெற்றால் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் முகத்துவார பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு பழவேற்காடை சுற்றி உள்ளல் 69 மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினர் இரண்டு வாரத்திற்குள் பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்தப்படும் என்று மீனவ கிராமமக்கள் தெரிவித்து உள்ளனர்.