தமிழ்நாடு (Tamil Nadu)

கிறிஸ்தவ மத போதகர் வீட்டு பூட்டை உடைத்து 80 பவுன் நகை கொள்ளை

Published On 2024-05-28 04:11 GMT   |   Update On 2024-05-28 04:11 GMT
  • கோவையில் சில நாட்கள் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட ஜான் தேவ சகாயம் இன்று கோவையில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பினார்.
  • தகவலின் பேரில் வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதியை சேர்ந்தவர் ஜான் தேவ சகாயம். இவர் டி.இ.எல்.சி. சபையில் போதகராக உள்ளார். இவரின் மனைவி எஸ்தர் கலான். இவர் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் போதகர் ஜான் தேவசகாயம் மருத்துவ சிகிச்சைக்காக கோவை சென்றுள்ளார். அவருடன் மனைவி எஸ்தர் கலான் உள்ளிட்ட குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

கோவையில் சில நாட்கள் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட ஜான் தேவ சகாயம் இன்று கோவையில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பினார். வீட்டுக்கு திரும்பிய அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பதறி அடித்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்கள் பீரோவில் இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர். கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கணேஷ் நகர் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை நகரின் பிரதான கணேஷ் நகர் பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News