தமிழ்நாடு (Tamil Nadu)

பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் பணி தீவிரம்

Published On 2022-09-21 07:08 GMT   |   Update On 2022-09-21 07:08 GMT
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடன் ஆதரவு தருவதற்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • அ.தி.மு.க.வில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

சென்னை:

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது. அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பு கூறினார்.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தனிநீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களிடன் ஆதரவு தருவதற்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் முன்பு இந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் உறுதிமொழி பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைக்கால பொதுச்செயலாளரை சுய விருப்பத்துடன் தேர்வு செய்ததாகவும், அவரை பொதுச்செயலாளராக்க முழுமையான ஆதரவு தருவதாகவும் உறுதிமொழி பத்திரம் பெறப்படுகிறது.

பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி பட்டியல் தயாரிக்கிறார்கள். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறும்.

Tags:    

Similar News