6 நாட்களாக இருளில் தவிக்கும் கிராம மக்கள்- பொதுமக்கள் கண்ணீர்
- கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
- வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிகன மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.
6 நாட்கள் ஆகியும் இன்று வரை சில பகுதிகள் இன்னும் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீளவில்லை. அதில் புன்னக்காயல் கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலுக்கு சென்று அங்கிருந்து கடலில் கலக்கிறது. தாமிரபரணி கரையோர கிராமமான இங்கு கனமழை காரணமாக 90 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டது.
கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புன்னக்காயல் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 அடிக்கும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் தற்போதும் சில பகுதிகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் புன்னக்காயலில் மட்டும் இன்று வரை வெள்ளம் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
இதனால் அங்கு செல்ல முடியாமல் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு செல்ல முடியாமல் புன்னக்காயல் தனித்தீவாக காட்சியளிக்கிறது.
பலத்த சேதம் அடைந்துள்ளதால் இன்று வரை அங்கு மின் விநியோகம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் கடந்த 6 நாட்களாகவே இருளில் தவித்து வருகிறார்கள்.
வெள்ளத்தில் பல வீடுகள் முழுவதும், பகுதியாகவும் இடிந்து உள்ளது. தற்போது வெள்ள நீர் குறிப்பிட்ட அளவு வடிந்து இருந்தாலும் பொதுமக்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.
வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள பொதுமக்களுக்கு அருகில் உள்ள திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியன் பட்டிணத்தில் இருந்து படகுகள் மூலம் சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளம் வடிந்த பகுதியில் வீடுகளில் சேறும், சகதிமாக காணப்படுகிறது. எனவே வீடுகளை பாராமரிப்பு செய்யும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
10 அடி மட்டத்திற்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த டி.வி. மிக்சி, கிரைண்டர் என அனைத்து பொருட்களும் நாசமாகின. இதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, கன மழை எங்கள் கிராமத்தையே புரட்டி போட்டுள்ளது. தனித்தீவில் இருப்பது போல் நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எனவே மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி நாங்கள் மீண்டும் வீடுகளில் குடியேற வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் வெள்ளத்தால் சேதம் அடைந்து விட்டது. எங்கள் வாழ்வாதாரமும் முற்றிலும் அழிந்து விட்டது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.