அண்ணாமலையின் நடைபயணம் மீண்டும் ஒத்திவைப்பு
- பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
- 2 முறை திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூரில் வருகிற 28-ந்தேதி நடைபயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாநகர பா.ஜ.க. வினர் செய்து வந்தனர்.
இந்தநிலையில் அண்ணாமலையின் நடைபயணம் தேதி திடீரென மாற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை இறுதிக்கட்ட நடை பயணத்தை சென்னையில் நிறைவு செய்து, அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இறுதிக்கட்ட நடைபயணம் மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருப்பூரில் நடத்தவும், அதில் 10 லட்சம் பேரை பங்கேற்க செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வருகிற 28-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2 முறை திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.