தமிழ்நாடு

நடுரோட்டில் உலா வந்த பாகுபலி யானை.


மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் ஒய்யார நடைபோட்ட பாகுபலி யானை- வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2022-08-09 06:37 GMT   |   Update On 2022-08-09 06:37 GMT
  • வனத்துறையினரும் தொடர்ந்து பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
  • வாகன ஓட்டிகள் யாரும் யானைக்கு தொந்தரவு கொடுக்காததால் யானையும் அச்சுறுத்தவில்லை.

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை காட்டு யானையான பாகுபலி சுற்றி திரிந்து வருகிறது.

இந்த யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து, அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதையடுத்து அந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினரும் தொடர்ந்து பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் பாகுபலி யானை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலேயே சுற்றி திரிந்து வந்தது. குறிப்பாக சமயபுரம் பகுதியிலேயே அதன் நடமாட்டம் இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி அடைந்திருந்தனர்.

இன்று காலை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பாகுபலி யானை வெளியேறியது. அந்த யானை மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் ஓடந்துறை பகுதியில் அங்குமிங்குமாக சென்றவண்ணம் இருந்தது.

சாலையின் நடுவிலும் ஒய்யார நடைபோட்ட படி யானை திரிந்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் விளக்கை ஒளிரவிட்டபடி நகர்ந்து சென்றன. அவற்றையெல்லாம் யானை கண்டுகொள்ளாமல் ரோட்டில் நடந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனங்களில் இருந்த பயணிகள் யானையை ஆச்சர்யத்துடனும், அச்சத்துடனும் பார்த்தனர். வாகன ஓட்டிகள் யாரும் யானைக்கு தொந்தரவு கொடுக்காததால் யானையும் அச்சுறுத்தவில்லை.

சில நிமிடங்களுக்கு பின் யானை சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அதன்பின் வாகனங்கள் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றன. அதிகாலையில் நடுரோட்டில் யானை நடமாடியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News