தமிழ்நாடு (Tamil Nadu)

வருவாய்த்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 77 புதிய வாகனங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2024-06-20 09:36 GMT   |   Update On 2024-06-20 09:36 GMT
  • பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
  • 77 புதிய வாகனங்களை 26 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை 3 அலுவலர்களிடம் வழங்கினார்.

சென்னை:

வருவாய்த்துறை, மாநிலத்தின் நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் இணையவழிச் சேவைகளை வழங்குதல், அலுவலகப் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

வருவாய்த் துறை அலுவலர்கள் தங்கள் பணியினை செம்மையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளும் வகையில், வருவாய்த்துறையில் பணிபுரியும் 34 துணை ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் மற்றும் 80 வட்டாட்சியர்களின் பயன்பாட்டிற்காக 114 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்திட 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக முதலமைச்சர் இன்றையதினம் 77 புதிய வாகனங்களை 26 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்து, வாகனங்களுக்கான சாவிகளை 3 அலுவலர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலை மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே.ராஜா ராமன், கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) முனைவர் ச. நடராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News