கோவை கார் வெடிப்பு- தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ. மீண்டும் அதிரடி சோதனை
- சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
கோவை:
கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார்.
காரில் வெடி பொருட்களை நிரப்பி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீசார் அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
முதற்கட்டமாக கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கோவில் பூசாரியிடமும் விசாரித்தனர்.
வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரையும் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கார் வெடிப்பு தொடர்பாக விசாரித்த போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் அதிகமானோர் செயல்படுவது தெரிய வந்தது. இதனால் அவர்களை கண்காணிப்பதுடன் அவர்களின் வீடுகளில் சோதனையிடவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.
கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த ஆதரவாளர்களின் பட்டியல்களை தயாரித்து உளவுத்துறை, என்.ஐ.ஏ.விடம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் இன்று இந்த சோதனை நடந்தது.
கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது.
பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சல்லடை போட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீடுகளில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.
சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சோதனை முடிவிலேயே என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.
என்.ஐ.ஏ. சோதனை நடந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், கயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திரு முல்லைவாசல் சொக்கலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த அல்பாஷித் (22) என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. காலை 5 மணிக்கு 6 பேர் கொண்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அல்பாஷித் வீட்டில் தான் இருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவாக பணியாற்றும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.
கார் வெடிப்பு தொடர்பாக கோவையில் கைதானவர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது முறையாக என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.