தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2023-01-21 03:56 GMT   |   Update On 2023-01-21 03:56 GMT
  • அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறந்து வைத்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர்.
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது.

அரியலூர்:

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியில் உள்ளது. ஸ்டாலின் தற்போது பொம்மை முதல்வராக செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் 20 மாதங்கள் ஆகியும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க.வில் கடைக்கோடி தொண்டனும் பொது செயலாளர் ஆகலாம். ஆனால் தி.மு.க.வில் தற்போது உதயநிதி அமைச்சர் ஆனது போல அடுத்துடுத்து அவர்களது குடும்பமே முதல்வராவர். மகன் என்ற ஒரே காரணத்தினால் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவர் தி.மு.க.வுக்காக என்ன செய்தார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவே அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பணை கட்டுவது, குடிமராமத்து பணிகள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, மருத்துவ படிப்புக்கான செலவையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 564 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிய உதயநிதி இதுவரை அந்த ரகசியத்தையும் சொல்லவில்லை. நீட் தேர்வை ரத்து செய்யவும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் காவிரிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் திறந்து வைத்து விட்டு பெருமைப்பட்டு கொள்கின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தமிழகம் போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக விளங்குகிறது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து 20 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் வழங்கப்படவில்லை. 1 கோடியே 1 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு பெரிய பொய்யை சொல்லியுள்ளார். அவருக்கு பொய் சொல்லுவதில் சிறந்தவர் என நோபல் பரிசு வழங்கலாம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News