தமிழ்நாடு (Tamil Nadu)

234 சட்டசபை தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்

Published On 2022-09-15 08:14 GMT   |   Update On 2022-09-15 08:14 GMT
  • வெற்றி மீது வெற்றி வந்து தன்னை சேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார்.
  • இன்று இரவு வடபழனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருகிறது. கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை.

பொதுக்குழு நடத்தி எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று ஐகோர்ட்டு அறிவித்தது.

அதேபோல் கட்சியின் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியும் பலனில்லாமல் போனது. கட்சியில் உறுப்பினராகவே இல்லாதபோது கட்சி அலுவலக சாவியை கேட்பது எப்படி? என்று அந்த மனுவையே சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

வெற்றி மீது வெற்றி வந்து தன்னை சேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்தில் இருக்கிறார். இன்று இரவு வடபழனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இன்று முதல் 17-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை (16-ந்தேதி) தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதனால் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டங்கள் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த பிறகு எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும். இது கட்சியினர் நம் பக்கம் என்பதை எடுத்துக்காட்டுவதற்கு மட்டுமல்ல. தி.மு.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக எடப்பாடி பழனிசாமியே அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்.

கட்சியின் 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களில் யாரையும் ஓ.பன்னீர்செல்வத்தால் இழுக்க முடியவில்லை. ஆனாலும் தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

இதையும் முறியடிக்கும் வகையில் சுற்றுப்பயண வியூகத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார்.

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டம் தயாரிக்கப்படுகிறது.

இந்த பயணத்தின்போது கட்சி தொண்டர்களும் யார் பக்கம் என்பதை வெளிக்காட்டும் வகையில் தொண்டர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, அண்ணா பிறந்தநாள் விழா, ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வருவதால் இப்போதைக்கு அதில் கவனம் செலுத்துகிறோம்.

சுற்றுப்பயணம் எப்போது என்பது பற்றிய விவரங்கள் அடுத்த வாரம் அல்லது இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்றனர்.

Tags:    

Similar News