பி.ஏ.பி. பாசன திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி
- பி.ஏ.பி. திட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீராதாரங்கள் வறண்டதால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் அணைநீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சென்றது.
- பி.ஏ.பி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் மற்றும் ஆழியாறு அணைகள் உள்ளன.
மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருமூர்த்தி அணையும் உள்ளது.
பி.ஏ.பி திட்ட அணைகளில் மலைப்பகுதியில் உள்ள அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர், சுரங்கப்பாதை, பீடர் கால்வாய் மற்றும் காண்டூர் கால்வாய் மூலம் சமவெளியில் உள்ள ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதில் திருமூர்த்தி அணை பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களும், ஆழியாறு பாசனத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுக்காததால், பி.ஏ.பி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் கடுமையாக சரிந்தது.
பி.ஏ.பி. திட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீராதாரங்கள் வறண்டதால், சோலையாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் அணைநீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சென்றது.
இந்த நிலையில் வால்பாறையில் கடந்த 2 வாரங்களாக கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
பி.ஏ.பி திட்ட தொகுப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சோலையாறு அணை நீர்மட்டம் 27.76 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்தது. பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 11.60 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 146 கன அடியாகவும் இருந்தது.
ஆழியாறு அணை நீர்மட்டம் 75.75 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 60 கன அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 31.10 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 40 கன அடியாகவும் இருந்தது.
பி.ஏ.பி திட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடைமழை கொட்டி தீர்த்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் பருவமழை தீவிரமடையும் என நம்புகிறோம். இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.