தமிழ்நாடு

டி.ஜி.பி. உத்தரவையடுத்து சேலத்தில் தம்பதி மீது முதல் கந்து வட்டி வழக்கு

Published On 2022-06-10 04:01 GMT   |   Update On 2022-06-10 04:01 GMT
  • தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ. தொடர்ந்து “ஆபரேஷன் கந்துவட்டி” எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • ‘ஆபரேஷன் கந்துவட்டி’ திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, சேலத்தில் முதல் கந்து வட்டி வழக்கு தம்பதி மீது பாய்ந்துள்ளது.

சேலம்:

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-ஐ. தொடர்ந்து "ஆபரேஷன் கந்துவட்டி" எனும் பெயரில் மேலும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கந்துவட்டி, ஆள் கடத்தல், நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து "ஆபரேஷன் கந்துவட்டி" மூலம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்குதல், பவர் எழுதி வாங்கி மிரட்டுதல், சொத்து பத்திரங்களை பறிமுதல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

டி.ஜி.பி. உத்தரவை அடுத்து, கந்து வட்டி தொடர்பாக சேலத்தில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம், சட்ட கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே, காவேரி நகரை சேர்ந்தவர் சித்தார்த்தன். இவருடைய மனைவி சுகன்யா ஜோசப் (வயது 36).

இவர் கந்துவட்டி கொடுமை தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலாஜி (40) மற்றும் அவரது மனைவி கீதா (39) ஆகியோரிடம் இருந்து கடந்த 2021ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயை 5 ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். அதற்கான தொகையை வட்டியுடன் கொடுத்துவிட்டேன். ஆனால், அசல் வட்டியுடன் 6 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பாலாஜி, கீதா தம்பதியர் மிரட்டுகின்றனர். ஆகவே இந்த கந்துவட்டி கொடுமையில் இருந்து போலீசார் என்னை காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீசார் பாலாஜி, கீதா மீது அதிக வட்டி கேட்டு மிரட்டல் விடுத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

'ஆபரேஷன் கந்துவட்டி' திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, சேலத்தில் முதல் கந்து வட்டி வழக்கு தம்பதி மீது பாய்ந்துள்ளது.

Tags:    

Similar News