தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் 5-வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
- வேம்பார் உட்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி:
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெறக்கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் கடந்த 30-ந்தேதி மீன்பிடி துறைமுகத்தில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் சார்பில் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
அந்த வகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதுபோல் வேம்பார் உட்பட மாவட்டத்தில் உள்ள சுமார் 25 ஆயிரம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் 450 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.